பி.டி.ஏ. குடியிருப்பு திட்டத்தில் ஊழல் எடியூரப்பா, மந்திரி எஸ்.டி.சோமசேகர் மீது வழக்குப்பதிவு


பி.டி.ஏ. குடியிருப்பு திட்டத்தில் ஊழல்  எடியூரப்பா, மந்திரி எஸ்.டி.சோமசேகர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் தொடா்பாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் தொடா்பாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு வளர்ச்சி ஆணையம்(பி.டி.ஏ.) சார்பில் குடியிருப்பு கட்டிடம் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா தொடங்க அனுமதி வழங்கி இருந்தார். இதுதொடர்பான ஒப்பந்த பணிகள் ராமலிங்கம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த கட்டுமான பணிகளை வழங்க, ராமலிங்கம் நிறுவனத்திடம் இருந்து முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவு துறை மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் குற்றச்சாட்டு கூறினார்.

இதுதொடர்பாக பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் அவர் வழக்கும் தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு எடியூரப்பா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து கா்நாடக ஐகோர்ட்டில் ஆபிரகாம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த, கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 14-ந் தேதி பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்தவும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

எடியூரப்பா மீது வழக்கு

இதையடுத்து, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு நீதிபதி, எடியூரப்பா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நவம்பர் 2-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி லோக் அயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், சசிதர் மரடி, சஞ்சய், சந்திரகாந்த், கட்டுமான நிறுவன அதிபர் ராமலிங்கம், பிரகாஷ், ரவி உள்ளிட்டோர் மீது பெங்களூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விரைவில் நோட்டீசு

வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி தகவல்களை பெற லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக எடியூரப்பா, விஜயேந்திரா, மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக கூறி, லோக் அயுக்தா போலீசார் கூடிய விரைவில் நோட்டீசு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை மூடப்பட்டு லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது லோக் அயுக்தா போலீசார், எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்திருப்பதால், அவருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உண்டாகி இருக்கிறது.


Next Story