ஓட்டல் ஊழியரிடம் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது


ஓட்டல் ஊழியரிடம் பணம்  பறித்த 3 வாலிபர்கள் கைது
x

ஓட்டல் ஊழியரிடம் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது நபர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். அவருக்கு பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை கிடைத்தது. இதையடுத்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அவர் குடும்பத்துடன் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் அவர் தனது செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தார். அது 'டேட்டிங்' செயலி என்று கூறப்படுகிறது. அந்த செயலி மூலம் அறிமுகமான ஒரு வாலிபரை சந்திக்க, ஓட்டல் ஊழியர் சர்ஜாப்புராவுக்கு சென்றார். அப்போது அவரை ஒசூர் மெயின் ரோடு சந்தபுராவுக்கு வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு மேலும் 2 பேர் வந்தனர்.

அதையடுத்து அந்த 3 பேரும் சேர்ந்து ஓட்டல் ஊழியரை தாக்கி அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் அவரது சகோதரரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறித்தனர். இச்சம்பவம் குறித்து அந்த ஓட்டல் ஊழியர் அளித்த புகாரின்பேரில் சர்ஜாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story