காவிரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு விளக்க மனு
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு விளக்க மனு அளித்துள்ளது.
புதுடெல்லி,
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன் தினம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி கர்நாடகாவில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. அதில் நீர் பற்றாக்குறை இருப்பது அறிந்தும் உரிய உத்தரவை கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
8.9 டிஎம்சி அளவிற்கு நீர் திறக்க உத்தரவிட்டிருக்க வேண்டிய நிலையில் அதை செய்ய காவிரி ஆணையம் தவறிவிட்டது. ஆக.29 முதல் செப்.12 வரை 7,200 கன அடி நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், 5,000 கனஅடி நீரை திறக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கையை காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.