காவிரி நதி நீர் வழக்கு - விசாரணை ஒத்தி வைப்பு


காவிரி நதி நீர் வழக்கு - விசாரணை ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 25 Aug 2023 1:49 PM IST (Updated: 25 Aug 2023 3:23 PM IST)
t-max-icont-min-icon

காவிரி நதி நீர் வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செப். 1ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறந்து விட கோரும் மனுவை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை அமைப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி அளித்தார். இதையடுத்து, காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வை காவிரி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. காவிரி நதிநீர் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார். எனவே, காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் இந்த அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கு 57 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், ( 25ம் தேதி) இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய அமிர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகா அரசின் தரப்பில், போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் அணைகளில் நீரின் அளவு குறைவாக தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தரப்பில், மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் மிகக் கடுமையான வறட்சி சூழலை சந்தித்து வருகிறோம். காவிரியில் இருந்து கர்நாடக நீரை திறந்து விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை வழங்காவிட்டால் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் 40 டிஎம்சி அளவிற்கு தண்ணீரை திறந்து விடாமல் இருக்கிறது. தண்ணீரை திறந்து விடும் கெடு முடிந்ததும் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பை நிறுத்தி விடும். தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகிப் போய்விடும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள்,காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஆகஸ்ட் 28-ல் நடத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் திறப்பு, இரு மாநிலங்களின் கோரிக்கை, மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் 28-ம் தேதி கூடி ஆலோசித்து முடிவெடுத்து அதன் விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Related Tags :
Next Story