கிரிப்டோகரன்சி உள்பட 5 நூதன மோசடிகள் எதிரொலி: சைபர் குற்றவாளிகளை பிடிக்க 76 இடங்களில் சி.பி.ஐ. சோதனை


கிரிப்டோகரன்சி உள்பட 5 நூதன மோசடிகள் எதிரொலி: சைபர் குற்றவாளிகளை பிடிக்க 76 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
x

கோப்புப்படம் 

5 நூதன மோசடிகள் எதிரொலியாக, சைபர் குற்றவாளிகளை பிடிக்க, தமிழகம் உள்பட 76 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

புதுடெல்லி,

ஆயிரக்கணக்கான மக்களிடம், கிரிப்டோகரன்சி முதலீடு என்ற பெயரில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. இது குறித்து நிதி புலனாய்வு பிரிவு தரவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பணிகளை செய்து கொடுப்பதாக கூறிக் கொண்டு கால்சென்டர் நிர்வாகங்கள், வெளிநாட்டு நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு உள்ளன. இது தொடர்பாக 9 கால்சென்டர்கள் மீது சி.பி.ஐ. போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் 2 வழக்குகள் பற்றி விசாரணை நடப்பதால் அதுபற்றிய முழுமையான விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த 5 நூதன மோசடிகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த திட்டம் 'ஆபரேஷன் சங்க்ரா-2' எனப்படுகிறது. இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் படை மற்றும் சர்வதேச உளவு அமைப்புகள் உதவியுடன் இந்த ஆபரேஷன் நடக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக சைபர் கிரைம் மோசடி நடப்பதாக சந்தேகிக்கப்படும் 76 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, இமாசலபிரதேசம், அரியானா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இந்த சோதனை நடந்தது. அது பற்றிய கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.


Next Story