பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் காரை மறித்து துப்பாக்கிமுனையில் ரு. 2 லட்சம் கொள்ளை - பரபரப்பு வீடியோ
பட்டப்பகலில் பரபரப்பான சுரங்கச்சாலையில் காரை மறித்து துப்பாக்கி முனையில் 2 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் சரை ஹலி கான் பகுதியையும் நொய்டாவையும் இணைக்கும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கச்சாலை உள்ளது.
இந்நிலையில், பிரஹதி மெய்டன் என்ற இந்த சுரங்கச்சாலையில் கடந்த 24ம் தேதி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த காரை பின் தொடர்ந்து 2 பைக்கில் வந்த 4 பேர் திடீரென காரை இடைமறித்தனர்.
ஹெல்மெட் அணிந்திருந்த அனைவரும் காரை இடைமறித்தனர். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய 2 பேர் காரில் இருந்தவர்களை தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டினர். பின்னர், காரில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பட்டப்பகலில் பரபரப்பான சுரங்கச்சாலையில் துப்பாக்கி முனையில் காரில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.