மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது...!


மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது...!
x
தினத்தந்தி 8 Aug 2023 3:01 AM GMT (Updated: 8 Aug 2023 5:03 AM GMT)

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்து பிரதமர் மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 'இந்தியா' எதிர்க்கட்சி கூட்டணிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந் தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன்படி நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது. விவாதத்துக்கு மொத்தம் 12 மணி நேரத்தை ஒதுக்கி அலுவல் ஆய்வுக்குழு அறிவித்துள்ளது. விவாதத்தின்போது மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

குறிப்பாக மே 4-ந்தேதி 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை எழுப்பி சர்ச்சையை உருவாக்க உள்ளன. எனவே இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் விவாதத்துக்கு மத்திய அரசு சார்பில் 10-ந்தேதி (வியாழக்கிழமை) பதில் அளிக்கப்பட உள்ளது. பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் பதில் அளிப்பது மரபாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி 10-ந்தேதி பதில் அளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story