6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவிப்பு
6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் 3 ஆண்டுகளுக்கு முன் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. எனினும், அதற்கு முன்பே 2019 செப்டம்பரில் சில ஐரோப்பிய நாடுகளின் கழிவு நீரில் கொரோனா மாதிரிகள் இருந்துள்ளன என ஆய்வு ஒன்று தெரிவித்தது. இதன் பின்பு சீனா உடனடியாக, கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நாட்டு அரசின் பெருமுயற்சியால் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனா கொரோனா பிடியில் இருந்து தப்பித்தது. ஆனால், உலக நாடுகளில் தொற்று, பல அலைகளாக பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனாவின் பல அலைகளை சந்தித்த பல நாடுகளும், ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த நவம்பரில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதாக கூறப்பட்டது. தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் உயர்ந்தது.
இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்தநிலையில், சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள், அங்கிருந்து புறப்படும் முன் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்வது கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.