இந்தியாவுக்கு வந்து ஜே.இ.இ. தேர்வில் தில்லுமுல்லு செய்த ரஷ்ய ஹேக்கர் - சுற்றிவளைத்து பிடித்த சிபிஐ..!


இந்தியாவுக்கு வந்து ஜே.இ.இ. தேர்வில் தில்லுமுல்லு செய்த ரஷ்ய ஹேக்கர் - சுற்றிவளைத்து பிடித்த சிபிஐ..!
x

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் முறைகேடு செய்ததாக ரஷ்ய நபரை மத்திய புலனாய்வுப் பிரிவு நேற்று கைது செய்தது.

புதுடெல்லி:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா கட்டுப்பாடால் இணையவழியில் நடைபெற்றது. அப்போது நடைப்பெற்ற மெயின்ஸ் தேர்வில் முறைக்கேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் அஃபினிட்டி எஜுகேஷன் என்ற தனியார் நிறுவனமானது பல்வேறு மோசடியாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இணையவழியாக நடைபெற்ற தேர்வில் கேள்வித்தாளைத் தேர்வுக்கூடத்துக்கு வெளியில் இருந்து தொடர்புகொண்டுள்ளனர்.

அதன் பின் தேர்வெழுதிய நபர்களின் கணினிகளை ரிமோட் ஆக்ஸஸ் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தேர்வர்களுக்கு பதிலாக, வெளியிலிருந்து இவர்கள் பதிலளிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

ஹரியாணா மாநிலம் சோனேபட்டில் உள்ள ஒரு தனியார் தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்ததும், தேர்வு மைய ஊழியர்களும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு விண்ணப்பித்தவர்களிடம் பெரிய அளவில் தொகையை வாங்கிக் கொண்டு, மோசடியில் ஈடுபட்டு அவர்களுக்கு என்ஐடியில் சேர்க்கை உதவியதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில், வழக்குடன் தொடர்புடைய ரஷிய நபரை சிபிஐ நேற்று கைது செய்தது.

அவருக்கு எதிராக ஏற்கெனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நபர் வெளிநாட்டில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு வந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




Next Story