பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நட்டாவுடன் 2-வது நாளாக மத்திய மந்திரிகள் சந்திப்பு
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டாவை 2-வது நாளாக மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள் சந்தித்தனர்.
புதுடெல்லி,
சில மாதங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராகி வருகிறது. அதற்காக, 4 மாநிலங்களில் பா.ஜனதா தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும் என்ற யூகமும் உலவி வருகிறது.
இந்த பின்னணியில், பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அர்ஜுன்ராம் மேக்வால், பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜிஜு ஆகியோர் தலைமை அலுவலகத்துக்கு வந்து பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர். இந்நிலையில், நேற்று 2-வது நாளாக, பா.ஜனதா தலைமை அலுவலகம் களைகட்டியது. மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல், ஜே.பி.நட்டாவை சந்தித்தார். பஞ்சாப் மாநில பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்ட சுனில் ஜாக்கர், நட்டாவை சந்தித்து பேசினார்.
மத்திய மந்திரி எஸ்.பி.எஸ்.பாகலும் நட்டவை சந்தித்தார். மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்ேதாஷை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இதையும், மத்திய மந்திரிசபை மாற்றம் தொடர்பான யூகத்தையும் முடிச்சு போடக்கூடாது என்று பா.ஜனதா தலைவர் ஒருவர் கூறினார். கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பாக இதுபோன்ற ஆலோசனைகள் நடப்பது வழக்கமானதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.