மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதில் நிலுவையா? - நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்


மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதில் நிலுவையா? - நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்
x

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடுகளை வழங்குவதில் மத்திய அரசு நிலுவை வைத்திருக்கிறதா என்பது குறித்து மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி,

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சினை பற்றி நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி. (சரக்கு சேவை வரி) இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகளாக வழங்கியும் வந்துள்ளோம்.

மாநிலங்களின் அக்கவுண்டண்ட் ஜெனரல் (தலைமை கணக்காயர்), தங்கள் மாநிலம் இந்த அளவு ஜி.எஸ்.டி. இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்று சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து மாநில அரசு கோரிய உடனேயே ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்படுகிறது.

மாநிலங்களின் தலைமை கணக்காயர் சான்றிதழில் தாமதம் ஏற்படுகிறபோது, ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதும் நிலுவையாகிறது என்பது வெளிப்படை.

'மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும்'

எனவே தலைமை கணக்காயர் சான்றிதழ், உரிய ஆவணங்களுடன் மாநிலங்களிடம் இருந்து வருகிறபோது, அந்த கணத்திலேயே பணம் விடுவிக்கப்படுகிறது.

மத்திய அரசு தரப்பில் அவ்வப்போது வழங்கி சரி செய்யப்பட்டு விடுகிறது. செஸ் வரியாக பணம் வருகிறபோது, அது மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

தலைமை கணக்காயர் மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு கோரல்களை ஏற்று சான்றளிக்காதபோது, அதை மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும்.

என் கைக்கு அது உரிய ஆவணங்களுடன் கிடைத்த உடனேயே பணம் விடுவிக்கப்பட்டு விடுகிறது.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு இதில் வாக்குவாதம் இருந்தாலும், அது மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து பேசுகிறபோது தீர்க்கப்பட்டு விடும்.

நிலுவையில் போடப்படுகிறதா?

பல மாநிலங்கள், ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவையில் போடப்படுவதாக நம்புகின்றன. ஆனால் பணம், வரிசெலுத்துகிற மக்களுடையது என்கிற நிலையில், தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாததால்தான் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது நிலுவை ஆகிறது.

ஜூன் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டில் பாதியளவு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மீதியும் செஸ் வரி வசூலானதும் வழங்கப்பட்டு விடும் என்று அவர் கூறினார்.


Next Story