ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு இன்றுமுதல் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு!
திரவுபதி முர்முவுக்கு 24 மணிநேரமும்,(சி.ஆர்.பி.எப்) இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 9-ந் தேதி வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்காவை (84) நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை சரத்பவார் நிருபர்களிடம் தெரிவித்தார்.யஷ்வந்த் சின்கா, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1984-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்தில் குதித்தார்.
யஷ்வந்த் சின்கா, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது மத்திய நிதி மந்திரியாக பணியாற்றி உள்ளார். வாஜ்பாய் பிரதமர் பதவி வகித்தபோது மத்திய நிதி மந்திரியாகவும், வெளியுறவு மந்திரியாகவும் இருந்துள்ளார்.
நேற்று இரவு பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்.
ஒடிசாவை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார்.
இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு 24 மணிநேரமும், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரால்(சி.ஆர்.பி.எப்) இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இசட் பிளஸ் பிரிவில் 36 பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளனர். 10 என்.எஸ்.ஜி மற்றும் எஸ்.பி.ஜி கமாண்டோக்கள் உள்ளனர், மீதமுள்ளவர்கள் போலீஸ் அணியைச் சேர்ந்தவர்கள்.
இந்த பாதுகாப்பு வி.வி.ஐ.பிகளுக்கு வழங்கப்படுகிறது. முதல் சுற்று பாதுகாப்புக்கு என்.எஸ்.ஜி பொறுப்பாகும். எஸ்.பி.ஜி இரண்டாவது அடுக்கில் அதிகாரிகளைக் கொண்டுள்ளது. இவர்களைத் தவிர, ஐ.டி.பி.பி மற்றும் சி.ஆர்.பி.எப் பணியாளர்களும் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எஸ்.பி.ஜி கமாண்டோக்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு இசட் பிளஸ் பிரிவின் பாதுகாப்பின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறார்கள்.