சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி: முழு அடைப்புக்கு அழைப்பு; ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்


சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி:  முழு அடைப்புக்கு அழைப்பு; ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்
x

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக தெலுங்கு தேச கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆந்திர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக மாநில குற்ற புலனாய்வு துறை (சி.ஐ.டி.) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால், ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டார். வருகிற 23-ந்தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, தெலுங்கு தேச கட்சி இன்று மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. எனினும், இன்று காலையில் வாகன போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் தலைவர்களை காவல் துறை வீட்டு காவலில் வைத்து உள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனசேனா, பா.ஜ.க. ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், ஆந்திர பிரதேசம் முழுவதும் பதற்ற நிலை காணப்படுகிறது. இந்த சூழலில், ஆந்திர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story