சந்திரயான்-3 விண்கலம் விரைவில் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்


சந்திரயான்-3 விண்கலம் விரைவில் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
x

சந்திரயான்-3 விண்கலம் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

ராக்கெட்டுகளை வடிவமைத்தல்

கர்நாடக அரசின் அறிவியல், தகவல், உயிரி தொழில்நுட்பத்துறை சார்பில் தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் 2-வது நாளான நேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்தரங்குகள் நடைபெற்றது. இவற்றில் இந்தியாவின் ஆராய்ச்சி-வளர்ச்சி மற்றும் புதுமைகளை புகுத்துதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

எங்களது இஸ்ரோ நிறுவனம், 100 புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அந்த நிறுவனங்களுடன் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ராக்கெட்டுகளை வடிவமைத்தல் போன்ற பணிகளில் நெருங்கி செயல்படுவோம். விண்வெளித்துறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திறன் மிகுந்த புதிய நிறுவனங்கள் முக்கிய நிறுவனங்களாக செயல்படும் சூழல் உருவாகும்.

அன்றாட வாழ்க்கை

அந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் பணியை இஸ்ரோ செய்யும். நாங்கள் ஒப்பந்தம் போட்டுள்ள 100 புத்தொழில் நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் செயற்கைகோள்கள் மற்றும் ராக்கெட்டை உருவாக்கும் பணியை மேற்கொள்கின்றன. நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலம் விரைவில் அதாவது அடுத்த சில மாதங்களில் விண்ணில் ஏவப்படும்.

விண்வெளி தொழில்நுட்பங்கள் தொடர்பான விஷயங்களில் நாங்கள் நாசாவுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. உலகில் விண்வெளி சுற்றுலா சூடுபிடித்துள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை தயாரிக்கின்றன. அது நமது அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இஸ்ரோவின் பங்களிப்பு

'சீர்மிகு நகரங்கள்' (ஸ்மார்ட் சிட்டி) மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி திட்டங்களில் இஸ்ரோவின் பங்களிப்பு முக்கியமானது. ராக்கெட் என்ஜின்களில் பயன்படுத்தப்படும் உந்துவிசை கருவியை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளோம்.

பசுமை மற்றும் கலப்பு தொழில்நுட்ப உந்துவிசை கருவி, அணு உந்துவிசை, கூட்டு தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவது, மின்சார சேமிப்பு கருவிகள், செயல்பாட்டு உபகரணங்கள், கார்பன் பைபர் தொழில்நுட்பம், மின் சாதன கருவிகள், குவான்டம் தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு சோம்நாத் பேசினார்.

கண்காட்சியை காண...

முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு பெற்ற பிரான்சின் நுண்ணியிரியாளர் டாக்டர் இம்மானுவேல் சார்பென்டியர், மரபணு என்ஜினீயரிங் தொழில்நுட்பம் குறித்து பேசினார். இந்த தொழில்நுட்ப மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சியை காண பொதுமக்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகள் ஏராளமானவர்கள் அங்கு வந்திருந்தனர்.


Next Story