காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கடைசி நிமிடம் வரை உழைத்தவர் உம்மன்சாண்டி - பினராயி விஜயன் புகழாரம்


காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கடைசி நிமிடம் வரை உழைத்தவர் உம்மன்சாண்டி - பினராயி விஜயன் புகழாரம்
x

நோய் பாதிப்பால் உடல் நலிவுற்ற நிலையிலும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தனது கடைசி நிமிடம் வரை உழைத்தவர் உம்மன்சாண்டி என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரம்,

கேரள முன்னாள் முதல்-மந்திரி மறைந்த உம்மன் சாண்டிக்கு கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடைசி நிமிடம் வரை உழைத்தவர்

நோய் பாதிப்பால் உடல் நலிவுற்ற நிலையிலும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தனது கடைசி நிமிடம் வரை உழைத்தவர் உம்மன்சாண்டி. உம்மன் சாண்டியும், நானும் 1970-ம் ஆண்டு சட்டசபையில் உறுப்பினர்களாக முதன் முதலாக நுழைந்தோம். அப்போது சட்டசபையில் நுழைந்த உம்மன்சாண்டி தொடர்ந்து 53 ஆண்டுகள் புதுப்பள்ளி தொகுதியில் உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவர். ஒரே காலகட்டத்தில் இருவரும் சட்டசபைக்குள் நுழைந்த போதும், எனக்கு தொடர்ச்சியாக சட்டசபையில் உறுப்பினராக உழைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் அந்த பணியினை மிக திறமையாக செய்தார். அதனால்தான் 53 ஆண்டுகள் அவரால் ஒரே தொகுதியில் உறுப்பினராக தொடர முடிந்தது.

மந்திரியாக அவர் பதவி வகித்த துறைகளில் முத்திரை பதித்தார். அதன் தொடர்ச்சியாக 2 முறை முதல்- மந்திரியாக பணியாற்றி சிறந்த ஆட்சியாளராக தன்னை முன்னிலைப்படுத்தியவர்.

கேரளாவுக்கு பேரிழப்பு

அதே போல் கேரளாவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதிலும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதிலும் தனிக் கவனம் செலுத்தினார். மக்களோடு மக்களாக, தொண்டர்களின் தோழனாக வாழ்ந்தவர். இதன் காரணமாக காங்கிரஸ் கூட்டணியில் (யு.டி.எப்.) யாராலும் கேள்வி கேட்க முடியாத தலைவராக விளங்கினார். நோய்வாய்பட்டு இருந்த போதும் கட்சி கூட்டங்களில் அவர் ஆர்வத்துடன் பங்கேற்றார்.

உம்மன்சாண்டியின் பிரிவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி நமது கேரள மண்ணுக்கும் பேரிழப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நினைவேந்தல் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுதாகரன் எம்.பி, எதிர்கட்சி தலைவர் சதீசன், ரமேஷ் சென்னித்தலா எம்.எல்.ஏ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.


Next Story