காரில் இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டு பலியான வழக்கு: 7 பேர் மீது 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


காரில் இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டு பலியான வழக்கு: 7 பேர் மீது 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
x

டெல்லியில் காரில் இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டு பலியான வழக்கில் 7 பேர் மீது 800 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில், ஸ்கூட்டரில் தனது தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண், ஒரு காரால் மோதப்பட்டார். சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு காரால் இழுத்துச் செல்லப்பட்ட அவர் பரிதாபமாக பலியானார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான அந்தக் காட்சி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்ததும், காருக்கு அடியில் இளம்பெண்ணின் உடல் சிக்கிக்கொண்டதை அறிந்ததும் தொடர்ந்து வாகனத்தை இயக்கியதும் தெரியவர, பலத்த கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை நேற்று டெல்லி போலீசார் தாக்கல் செய்தனர். டெல்லி ரோகிணி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப்பத்திரிகை 800 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. அதில் 117 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேர் மீது கொலை வழக்கும், இருவர் மீது மோட்டார் வாகன சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு சன்யா தயாள் உத்தரவிட்டார்.


Next Story