வாலிபரை சாலையில் ஓட ஓட விரட்டி சரிமாரி அரிவாள் வெட்டு; மா்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


வாலிபரை சாலையில் ஓட ஓட விரட்டி சரிமாரி அரிவாள் வெட்டு; மா்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x

சினிமா டிக்கெட் எடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை சாலையில் ஓட ஓட வெட்டி கொல்ல முயற்சித்தவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;

சினிமா டிக்கெட்

சிக்கமகளூரு டவுன் பஸ் நிலையம் அருகே சினிமா தியேட்டர் ஒன்று உள்ளது. இந்த தியேட்டரில் புதிய கன்னட திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தை பார்ப்பதற்கு நேற்றுமுன்தினம் மாலை அதே பகுதியை ேசர்ந்த பரத்(வயது 25) என்பவர் வந்திருந்தார். அப்போது டிக்கெட் எடுக்கும் விஷயத்தில், அவருக்கும், அங்கு வந்த மற்றொரு கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இவருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பரத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி ஆகியவற்றால் பரத்தை தாக்கியுள்ளனர். இதையடுத்து பரத், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அந்த மர்மகும்பல் அவரை விடாமல் பின்தொடர்ந்து சாலையில் ஓட ஓட விரட்டி அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தப்பி ஓடினர்

இதில் பயங்கர கத்திகுத்து காயம் அடைந்த பரத் ரத்தவெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார். இதைப்பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பரத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவா் மேல் சிகிச்சைக்காக ஹாசனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து சிக்கமகளூரு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று போலீசார் பார்வையிட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கபட்டது. மோப்ப நாய்கள் சிறிது தூரம் மோப்பம் பிடித்து சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிக்கமகளூரு டவுன் போலீசார் மர்மகும்பலை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தியேட்டர் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story