சென்னை டாக்டர் கொலை வழக்கில் காதலி உள்பட 3 பேர் கைது
பெஙகளூருவில் நடந்த சென்னை டாக்டர் கொலை வழக்கில் காதலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு: பெஙகளூருவில் நடந்த சென்னை டாக்டர் கொலை வழக்கில் காதலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
சென்னை டாக்டர் கொலை
தமிழ்நாடு சென்னையை சேர்ந்தவர் விகாஷ். இவர், உக்ரைன் நாட்டுக்கு சென்று டாக்டருக்கு படித்திருந்தார். சென்னையில் டாக்டராக அவர் பணியாற்றினார். பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் வந்திருந்தார். இதற்கிடையில், கடந்த 9-ந் தேதி பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைகோ லே-அவுட் 17-வது கிராசில் உள்ள காதலி வீட்டில் கோமா நிலையில் இருந்த விகாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விகாஷ் இறந்து விட்டார்.
இதுகுறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விகாசை, அவரது காதலி மற்றும் நண்பர்கள் தான் கொலை செய்திருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், விகாசை கொலை செய்ததாக மைகோ லே-அவுட்டை சேர்ந்த பிரதிஷா, அவருடைய நண்பர்களான சுசீல், கவுதம் ஆகிய 3 பேரையும் பேகூர் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆபாச புகைப்படத்தை வெளியிட்டதால்...
விகாசும், பிரதிஷாவும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விகாஷ், பிரதிஷா குடும்பத்தினர் முடிவு செய்தாா்கள். இதற்கிடையில், பிரதிஷாவின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் விகாஷ் வெளியிட்டார். இதனால் பிரதிஷா ஆத்திரமடைந்தார். இதுபற்றி தனது நண்பர்களான சுசீல், கவுதம், சூர்யாவிடம் பிரதிஷா கூறி இருந்தார். இதையடுத்து, அவர்கள் 4 பேரும் சேர்ந்து விகாசை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதற்காக கடந்த 9-ந் தேதி விகாசை, மைகோ லே-அவுட்டில் உள்ள தனது வீட்டுக்கு பிரதிஷா வரவழைத்தார். அங்கு வைத்து விகாசை, பிரதிஷாவின் நண்பர்கள் அடித்தும், வீடு சுத்தம் செய்யும் மாப் மூலமாகவும் அடித்து தாக்கி கொலை செய்திருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். கைதான 3 பேரையும் விசாரணைக்கு பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தலைமறைவாக உள்ள சூர்யாவை பேகூர் போலீசார் தேடிவருகிறார்கள்.