செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது.
புதுடெல்லி,
உலக வரலாற்றில் சென்னை பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும் விளையாடுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.
இதற்கிடையே போட்டியையொட்டி சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதலாவது நாடு இந்தியா ஆகும்.இனி ஒவ்வொரு முறையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும். இந்த சுடர் ஓட்டம் செஸ் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும். இந்த முறை நேரமின்மை காரணமாக சுடர் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி சுடர் ஓட்டத்தை வருகிற நாளை மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த சுடர் ஓட்டம் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தடையும் என கூறப்படுகிறது.