சத்தீஷ்காரில் 11 பேரை பலி கொண்ட கண்ணிவெடியை 2 மாதங்களுக்கு முன்பே புதைத்த நக்சலைட்டுகள்போலீஸ் விசாரணையில் அம்பலம்
இதில், 11 பேரை பலி கொண்ட அந்த கண்ணிவெடி குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்பே புதைக்கப்பட்டுள்ளது
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் தண்டேவாடா மாவட்டத்தில் அரண்பூர் அருகே கடந்த 26-ந்தேதி நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றிய நக்சலைட்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில், 11 பேரை பலி கொண்ட அந்த கண்ணிவெடி குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்பே புதைக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீஸ் ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்தார். அதன் மேற்பரப்பில் புற்கள் வளர்ந்து, கண்ணிவெடியு டன் இணைக்கப்பட்ட வயரை மறைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பவம் நடந்ததற்கு முந்தைய தினத்தில் அந்த சாலையில் கண்ணிவெடி சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் எந்தவொரு மர்ம பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறிய போலீஸ் ஐ.ஜி., இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.