கோழி குஞ்சுகளை குள்ளநரிகளால் பாதுகாக்க முடியாது; கேரள அரசியல்வாதிகளை சாடிய பா.ஜ.க.
கோவில்களுக்கான நிதியை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் கொள்ளையடிக்கின்றனர் என கேரள பா.ஜ.க. துணை தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கொச்சி,
கேரள பா.ஜ.க. துணை தலைவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுவாக வழிபடும் இடங்கள் மீது கடுமையான நோக்கங்களை கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ளனர். கொள்கையளவில் அவர்கள் கடவுள், கோவில்கள், சடங்குகள் உள்ளிட்டவை மீது நம்பிக்கை கொள்வதில்லை.
ஒருவேளை அவர்கள் கடவுள் உள்ளிட்டவற்றை கொண்டாடினால், அது மார்க்சீய தத்துவத்தின் நோக்கங்களை நீர்த்து போக செய்ய கூடிய செயலாகி விடும். அவர்களால் கடவுளை ஏற்று கொள்ளவோ, கொண்டாடவோ முடியாது.
கேரளாவில் அவர்கள் மத நம்பிக்கைகளை பாதுகாப்பவர்கள் போன்று தங்களை முன்னிறுத்த விரும்புகின்றனர். அவர்கள் எப்படி அதனை செய்ய முடியும்? குள்ளநரிகளால் கோழி குஞ்சுகளை பாதுகாக்க முடியாது.
அதனால், கம்யூனிஸ்டுகளால் வழிபடும் இடங்களை பாதுகாக்க முடியாது. ஏனெனில் அவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா சமூக ஊடகம் ஒன்றில் பத்மநாப சுவாமி கோவிலை குறிப்பிட்டு வீடியோ ஒன்றில் பேசும்போது, இந்து கோவில்களை கம்யூனிஸ்டு அரசுகள் தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றன என கூறியுள்ளார்.
கேரளாவை போன்று, சில அரசுகள், கோவில்களை வருவாய்க்காக அதன் மீதுள்ள பொறுப்புகளை எடுத்து கொள்கின்றன. இந்த நடவடிக்கையை நீதிபதி யூ.யூ. லலித் உடன் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
இதனை குறிப்பிட்டு பேசிய கேரள பா.ஜ.க. தலைவர், இந்து மல்கோத்ரா கூறியது உண்மை. தேவஸ்வம் மற்றும் அதன் விழாக்களை பராமரித்து வரும் அமைப்புகள் அனைத்தும் இந்துக்களால் செலவு செய்யப்படுகிறது.
இந்த அனைத்து அமைப்புகளும் அரசியல் கட்சிகளுக்கு திறந்து விடப்பட்டு உள்ளன. அரசியல்வாதிகள் நிதியை கொள்ளையடிக்கின்றனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் சட்டவிரோத வகையில் பலன்களை பறித்து கொள்வதுடன் கோவில் நிதியை கொள்ளையடிக்கின்றனர்.
இதனால், அவர்களது சொந்த நம்பிக்கைகளையே அவர்கள் வீழ்த்தி கொண்டிருக்கின்றனர். சமூகம் மட்டுமின்றி அவர்களையே கூட அவர்கள் ஏமாற்றி கொள்கின்றனர் என அவர் கடுமையான முறையில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.