தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டால் உபா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு


தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டால் உபா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு
x
தினத்தந்தி 1 Oct 2022 4:45 AM IST (Updated: 1 Oct 2022 4:45 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.

பெரும்பாவூர்,

மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த அமைப்பின் அலுவலகங்களை பூட்டி சீல் வைப்பது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டி.ஜி.பி. அணில் காந்த், சட்டம்-ஒழுங்கு துணை டி.ஜி.பி. மனோஜ் ஆப்ரகாம் ஆகியோர் முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களை பூட்டவும், தடை செய்யவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்தநிலையில் அமைப்பின் அலுவலகங்களை பூட்டுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதில் எந்தவிதமான அவசரமும் காட்டக்கூடாது. இதுகுறித்து மாவட்ட நீதிபதியான மாவட்ட கலெக்டர்களுடன், கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டு உள்ளார்.

குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்களும், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட உள்ளவர்களுமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்ய வேண்டும். இதற்கு முன்பு இந்த அமைப்பை விட்டு போனவர்கள், இந்த அமைப்பின் அனுதாபிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படுத்துவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்களை கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டப்பட்டு உள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக கோஷமிட்டதால், திருவனந்தபுரம் கல்லம்பலம் பகுதியை சேர்ந்த 2 பேர், இடுக்கி பாலன் பிள்ளை சிட்டியை சேர்ந்த 7 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பிற்கோ அல்லது அதன் சார்புடைய அமைப்புகளின் பெயரிலோ ஆதரவாக பதிவிடுபவர்கள் மீதும் உபா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வங்கி கணக்குகளை முடக்க சம்பந்தப்பட்ட வங்கி தலைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story