18 ஆண்டுகளாக குழந்தை இல்லை, குடும்பத்தினர் சித்ரவதை; புது திட்டம் போட்ட பெண்
18 ஆண்டுகளாக குழந்தை இல்லாததற்காக குடும்பத்தினரின் சித்ரவதையை அனுபவித்த பெண் போட்ட புது திட்டம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் இடாவா மாவட்டத்தில் உதி மோர் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து 18 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால், அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அந்த பெண்ணை புண்படுத்தி வந்துள்ளனர். இதில், அவர் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில், சமூக சுகாதார மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து விட்டு திரும்பிய அவர் குடும்பத்தினரிடம் கர்ப்பம் அடைந்த தகவலை கூறியுள்ளார்.
இதற்காக கடந்த 6 மாதங்களாக விடாமல் மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டார். வீட்டுக்கு புது வாரிசு வர போகும் மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், கர்ப்பிணியான 6 மாதத்தில் தனக்கு வயிறு வலிக்கிறது என அந்த பெண் கூறி, அவரது குடும்பத்தினரை குழப்பினார். திடீரென குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது என கூறி ஒன்றை கொடுத்து உள்ளார். அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுபட்டும், முகம் மற்றும் உடல் தோற்றம் விகாரத்துடன் காணப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் அதனை வாங்கி துணியால் சுற்றி சுகாதார மையத்திற்கு பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
அதனை வாங்கி பரிசோதித்த டாக்டர், அது குழந்தை அல்ல என்றும் பிளாஸ்டிக் பொம்மை என்றும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். கர்ப்பம் தொடர்புடைய ஆவணங்களை வாங்கி பார்த்த டாக்டர், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்தும் போலியானவை என கூறியுள்ளார்.
இதுபற்றி டாக்டர் ஹர்சித் கூறும்போது, அந்த பெண் கர்ப்பகால பரிசோதனைக்கு வரவில்லை எனவும், வயிற்றில் ஏற்பட்ட பாதிப்புக்காக சிகிச்சை செய்ய வந்து சென்றுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
திருமணம் நடந்து நீண்டகாலம் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில், பலரும் பலவிதத்தில் பேசுவதில் இருந்து தப்பிக்க இந்த நாடக அரங்கேற்றம் செய்துள்ளார் என டாக்டர் கூறி தெளிவுப்படுத்தி உள்ளார்.
பிளாஸ்டிக் பொம்மைக்கு வண்ணம் பூசி குழந்தை போல் மாற்றி, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என கூறி, அதனை தனது குடும்பத்தினரிடம் அந்த பெண் கொடுத்துள்ள விவரமும் பின்பு தெரிய வந்துள்ளது.