சீன கடன் செயலி வழக்கு: பேடிஎம், ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனத்தில் அமலாக்க துறை சோதனை


சீன கடன் செயலி வழக்கு:  பேடிஎம், ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனத்தில் அமலாக்க துறை சோதனை
x
தினத்தந்தி 3 Sept 2022 6:46 PM IST (Updated: 3 Sept 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

சீன கடன் செயலி வழக்கில் பேடிஎம், ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனத்தில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது.

புதுடெல்லி,

சீனர்களால் நடத்தப்படும் அரசால் அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளில் பணபரிமாற்ற வசதிகளை அளித்த குற்றச்சாட்டின்பேரில் பேடிஎம், ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளது.

நாட்டில் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சீன கடன் செயலிகளும் இதில் அடங்கும்.

இந்த செயலிகள், இந்தியர்களை கடன் வலையில் வீழ்த்தி, ரூ.500 கோடிவரை முறைகேடாக சம்பாதித்துள்ளன. அவர்களின் மிரட்டலுக்கு 52 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பற்றிய வழக்கு ஒன்றை அமலாக்க துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையில், கடன் வழங்கும் நடைமுறைகளில் அவை ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிறுவனங்களில் சில சட்டவிரோத சூதாட்டத்திலும் தொடர்பு கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இதுபற்றிய சோதனை தொடங்கியதும், பல நிறுவனங்கள் தங்களது கடையை மூடி விட்டன. சில நிறுவனங்கள் பெருந்தொகையை கிரிப்டோகரன்சி சொத்துகளை வாங்குவதற்காக நிதியை திருப்பி விட்டுள்ளன. பின்னர், அவை வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சமீபத்தில் இதுபோன்ற கிரிப்டோகரன்சி பரிமாற்றத்துடன் தொடர்புடைய வசீர்எக்ஸ் நிறுவன வளாகங்களில் அதிரடி சோதனை நடத்தி ரூ.64 கோடியை அமலாக்க துறை முடக்கியது.

இந்த வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பணியாளர்களை அமர்த்தி, தனிநபர் தகவல்களை தவறாக பயன்படுத்தி வந்துள்ளன. கடன் பெற்ற நபர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, பேசி, அதிக வட்டி விகிதங்களையும் வசூலித்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கணக்கில் வராத, சந்தேகத்திற்குரிய பணபரிமாற்றங்களுடன் தொடர்புடைய பேடிஎம், ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனங்களின் பணபரிமாற்றங்கள் பற்றிய சோதனையிலும் அடுத்து அமலாக்க இயக்குனரகம் ஈடுபட்டு உள்ளது. இதில், ஹவாலா பணபரிமாற்றங்களும் நடந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபா என்ற சீன நிறுவனம் குறிப்பிட்ட அளவில் முதலீடுகளை செய்துள்ளது.

அமலாக்க துறை கூறும்போது, சில சீனர்கள் இந்திய கணக்கியலாளர்கள் மற்றும் இந்திய இயக்குனர்கள் உதவியுடன் பல்வேறு இந்திய நிறுவனங்களை தொடங்குகின்றனர். பின்னர், இந்தியாவுக்கு பயணம் செய்து, இயக்குனர் பதவியை கையப்படுத்தி கொள்கின்றனர் என தெரிவித்து உள்ளது.

இதுபோக, இ-வர்த்தகம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான வலைதளங்கள் தொடங்கப்பட்டு, ஆன்லைன் சூதாட்டமும் ஊக்குவிக்கப்படுகிறது. இவற்றில், கடந்த ஓராண்டாக ஒரு கணக்கில் ரூ.1,268 கோடி வரை பெறப்பட்டு உள்ளது என்றும், அவற்றில் ரூ.300 கோடி பணம் பேடிஎம் வழியே வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ரூ.600 கோடி பணபரிமாற்றமும் இதே வழிமுறையிலேயே நடந்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களுக்காக, சீன டேட்டிங் செயலிகளை இயக்கும் பிற இந்திய நிறுவனங்களும் விவரிக்கப்படாத பணபரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளன என விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது.

இதுபற்றி ரேசர்பே மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனங்கள் கூறும்போது, விசாரணைக்கு கூடுதல் தகவல்களை அளிக்கும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர். நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். தேவையான விவரங்களை பகிர்ந்து வருகிறோம். எங்களுடைய அக்கறையுடன் கூடிய நடைமுறையால் அதிகாரிகள் திருப்தி அடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.


Next Story