கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீன போர் விமானங்கள்; இந்தியா பதிலடி


கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீன போர் விமானங்கள்; இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 24 July 2022 4:46 PM IST (Updated: 24 July 2022 5:07 PM IST)
t-max-icont-min-icon

சீனாவுடன் தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பின்னரும், கிழக்கு லடாக்கில் நிறுத்தியுள்ள இந்திய படையினரை தூண்டும் வகையில் ஜெட் விமானங்கள் அத்துமீறி பறந்து செல்கின்றன.



புதுடெல்லி,



கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன.

எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வந்தது. இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது.

4 மாத இடைவெளிக்கு பின்பு இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு படைகளும் குறைந்தது நவீன ஆயுதங்களுடன் கூடிய தலா 60 ஆயிரம் படை வீரர்களை எல்லையில் குவித்து உள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றநிலை நீடித்தது. இதனை கவனத்தில் கொண்டும், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றது.

இதனை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் உள்ள விவகாரங்களில், ராணுவ மற்றும் தூதரக வழிகளில் நெருங்கிய தொடர்புடன் இருந்து, பேச்சுவார்த்தைகளின் வழியே பரஸ்பரம் ஏற்று கொள்ள கூடிய தீர்மானம் ஒன்றை இயற்றி வெகுசீக்கிரத்தில் தீர்வு எட்டப்படும் என இந்தியா மற்றும் சீனா இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், தொடர்ந்து ஜே-11 உள்பட சீனாவின் போர் விமானங்கள் அத்துமீறி அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை நெருங்கி பறக்கிறது. சமீபத்திய காலங்களில், அந்த பகுதியில் 10 கி.மீ. அளவுள்ள நம்பிக்கைக்கான கட்டிட அளவீட்டு பகுதியில் அத்துமீறும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கு முன்பும் பலமுறை சீன ஜெட் விமானங்கள் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளன.

இந்திய பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 3 முதல் 4 வாரங்களாக சீன போர் விமானங்கள் பறந்து செல்கின்றன.

இதற்கு இந்திய விமான படை அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மிக்-29 மற்றும் மிரேஜ் 2000 ஆகிய இந்திய போர் விமானங்கள், அனுப்பப்பட்டு ஒரு சில நிமிடங்களில் சீன நடவடிக்கைகளுக்கு பதிலடி தருகிறது. எனினும், லடாக் பிரிவில் சீன நடவடிக்கைகளை நெருங்கி கண்காணிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ள இந்திய விமான படை உட்கட்டமைப்பு ஆனது, சீன ராணுவத்துக்கு பதற்றம் ஏற்படுத்தி உள்ளது எனவும் கூறப்படுகிறது.


Next Story