எந்திரம் விற்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி
எந்திரம் விற்பதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூவை சேர்ந்தவர் குமரேஷ். தொழில் அதிபர். இவர் தனது நிலத்தை சமன்படுத்தும் பணியை மேற்கொண்டார். அதற்காக அவருக்கு எந்திரம் தேவைப்பட்டு உள்ளது. இதற்காக அவர் தனது நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் கிஷோர் என்பவரிடம் எந்திரம் வாங்க சொல்லி இருந்தார்.
இதையடுத்து கிஷோர், மராட்டிய மாநிலம் அமராவதியில் உள்ள அமோல் சர்ஜராவ் என்பவரது கடையில் எந்திரம் இருப்பதை பாா்த்துள்ளார். பின்னர் அவர் அந்த கடைக்கு சென்று எந்திரம் குறித்து கேட்டறிந்தார். இதில் கடையின் உரிமையாளர் எந்திரத்தின் விலை ரூ.13 லட்சம் என கூறியுள்ளார். இதையடுத்து கிஷோர், கடையின் உரிமையாளரின் தகவல்களை பெற்று கொண்டு குமரேசிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து குமரேஷ், முன்பணமாக அமோல் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.10 லட்சத்தை அனுப்பினார். பின்னர் எந்திரத்தை வாங்குவதற்காக குமரேஷ் மற்றும் கிஷோர் இருவரும் அமராவதிக்கு சென்றபோது அங்கு அவரது கடை பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் அவரது செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் இதுகுறித்து மங்களூரு வடக்கு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.