டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு குளிர் அலை தொடரும் - வானிலை ஆய்வு மையம் கணிப்பு


டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு குளிர் அலை தொடரும் - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
x

டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி குறைந்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை 4.7 டிகிரி செல்சியசாகவும், சனிக்கிழமை 10.2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது.

பஞ்சாப், அரியாணா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியாணாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியசாகவும், பஞ்சாபின் அமிர்தசரசில் 1.5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.

வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும். அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முதல், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story