பீகாரை தொடர்ந்து சத்தீஷ்காரில் இடிந்து விழுந்த பாலம்


பீகாரை தொடர்ந்து சத்தீஷ்காரில் இடிந்து விழுந்த பாலம்
x

பீகாரை தொடர்ந்து சத்தீஷ்காரில் கட்டுமான பணியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்து உள்ளது.

துர்க்,

சத்தீஷ்காரின் துர்க் மாவட்டத்தில் சிவ்நாத் ஆற்றில், கட்டுமான பணியில் உள்ள பாலம் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்து உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து உள்ளது. ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்து சென்றபோது, பாலத்தின் கட்டுமானத்தில் இருந்த பகுதி சரிந்து விழுந்தது.

பீகாரில் கட்டுமான பணியில் இருந்த பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்த நிலையில், சத்தீஷ்காரில் மற்றொரு சம்பவம் ஏற்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்ட தற்காலிக பாலம் ஒன்று பலத்த காற்று வீசியதில் இன்று இடிந்து விழுந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த பாலம், ரகோப்பூர் நகர் மற்றும் வைஷாலி மாவட்டத்தின் தலைமையகம் ஆகியவற்றை இணைக்கின்றது.

பீகாரில் கடந்த 4-ந்தேதி, ககாரியா மாவட்டத்தின் அகுவானி காட் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தின் சுல்தான்கஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்க கூடிய வகையில், கட்டுமான பணியில் இருந்த பாலம் ஒன்று, திடீரென இடிந்து விழுந்தது. ரூ.1,750 கோடி செலவில், 4 வழி சாலை உடன் அந்த பாலம் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2-வது முறையாக இடிந்து விழுந்த அந்த சம்பவத்தில் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து விட்டார். இதற்கு 14 மாதங்களுக்கு முன் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த, சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் மற்றொரு பாலம் இடிந்து விழுந்து பரபரப்பு ஏற்படுத்தியது. பீகாரில் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள தூண் ஒன்று திடீரென கடந்த 24-ந்தேதி இடிந்து விழுந்தது.

இந்த பாலம், கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வந்தது. கட்டுமான பணியின்போது, மனித தவறால் தூண் இடிந்து விழுந்து உள்ளது என இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகத்தின் திட்ட இயக்குநர் அரவிந்த் குமார் கூறினார்.

இந்த சம்பவத்தில் ஒருவரும் காயம் அடையவில்லை என கூறியுள்ள அவர், இதுபற்றி விசாரணை நடத்த நிபுணர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். பீகாரில் ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.


Next Story