நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் சாவு; 'செல்பி' எடுக்க முயன்றபோது பரிதாபம்
சிவமொக்காவில் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயற்சித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சிவமொக்கா;
நீச்சல் குளம்
சிவமொக்கா டவுன் ஜோசப் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 18). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.யூ.சி. படித்து வந்தார். தனியார் பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நண்பருடன் நீச்சல் குளத்திற்கு குளிக்க சென்றிருந்தார். அப்போது நண்பர்களுடன் அவர் தண்ணீரில் நீந்தியபடி செல்பி எடுக்க முயற்சித்தார்.
இதில் நிலை தடுமாறிய ராஜேஷ் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதை கவனிக்காமல் செல்பி எடுத்த நண்பர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டனர். ஆனால் ராஜேஷ் மட்டும் வெளியே வரவில்லை. நண்பர்கள் அவரை தேடிய போது நீரில் மூழ்கியிருப்பது தெரியவந்தது.
பரிதாபம்
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துங்காநகர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மீ்ட்பு குழுவினர் உதவியுடன் ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், செல்பி எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி இறந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துங்காநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.