அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: மதரசா பள்ளி ஆசிரியருக்கு 6 மாதம் சிறை

அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதரசா பள்ளி ஆசிரியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து பெல்தங்கடி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மங்களூரு-
அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதரசா பள்ளி ஆசிரியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து பெல்தங்கடி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மதரசா ஆசிரியர்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பன்னாவை சேர்ந்தவர் முகமது சைபுல்லா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். முகமது அப்பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், இவர் கடந்த 2021-ம் ஆண்டு சொந்த வேலை காரணமாக தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவிற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து அரசு பஸ்சில் சிக்கமகளூருவுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் பஸ் பெல்தங்கடி தாலுகா இலந்திலா அருகே கடவின பாகலு பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது முகமது பஸ்சில் நின்று கொண்டு இருந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாலியல் தொல்லை
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து பஸ்சில் இருந்த சக பயணிகள் என்னவென்று மாணவியிடம் கேட்டனர். மாணவி, முகமது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதையடுத்து சக பயணிகள் முகமதுவிற்கு தர்ம அடி கொடுத்து அவரை உப்பினாங்கடி போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் முகமதுவை ேபாலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு பெல்தங்கடி கோர்ட்டில் நடந்து வந்தது. உப்பினங்கடி போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
6 மாதம் சிறை
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தேவராஜா நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததில் முகமதுவிற்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.






