அரபிக்கடலில் போர்க்கப்பல்கள், விமானங்களுடன் போர்த்திறனைப் பறைசாற்ற இந்தியக் கடற்படை அதிரடி காட்டி அசத்தல்


அரபிக்கடலில் போர்க்கப்பல்கள், விமானங்களுடன் போர்த்திறனைப் பறைசாற்ற இந்தியக் கடற்படை அதிரடி காட்டி அசத்தல்
x

அரபிக்கடலில் விமானம்தாங்கி போர்க்கப்பல்கள், போர் விமானங்களுடன் போர்த்திறனைப் பறை சாற்றுவதற்கு இந்தியக்கடற்படை அதிரடி நடவடிக்கை எடுத்து அசத்தி உள்ளது.

அண்டை நாடுகளுடன் பிரச்சினை

இந்தியாவில் பாகிஸ்தான் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை அரங்கேற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனால் இரு தரப்பு உறவு சுமூகமாக இல்லை.

மற்றொரு அண்டை நாடான சீனாவுடன் எல்லைத்தகராறு இருந்து வருவதால் லடாக் எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்து போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

போர்த்திறன் காட்டும் நடவடிக்கை

இந்த நிலையில் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத வகையில், போர்த்திறனை வெளியுலகுக்கு பறைசாற்றும் வகையில் இந்தியக் கடற்படை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இந்த துணிச்சலான நடவடிக்கை அரபிக்கடலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல்கள் இப்போதுதான் வெளியே வந்துள்ளன. இந்த போர்த்திறன் பறை சாற்றும் நடவடிக்கையில் இந்தியாவின் விமானம்தாங்கி போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, ஐ.என்.எஸ். விக்ரந்த் ஆகியவை முக்கிய இடம் பிடித்தன.

மிக்-29 கே உள்ளிட்ட 35 போர் விமானங்கள், எம்.எச்.60 ஆர், காமோவ் ஹெலிகாப்டர்கள், அதிநவீன லகுரக ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டன. அவற்றுக்கு இந்த இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மிதக்கும் விமான தளங்களாக செயல்பட்டன. அசத்தலான இந்தப் போர்த்திறன் நடவடிக்கை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

மைல்கல்

இதுபற்றி இந்தியக் கடற்படை செய்தி தொடர்பாளர் விவேக் மாத்வால் கூறியதாவது:-

இந்தியக் கடற்படையானது, 2 விமானம்தாங்கி போர்க்கப்பல்கள், 35 போர் விமானங்களுடன் அரபிக்கடலில் தனது வல்லமைமிக்க போர்த்திறனைக் காட்டுகிற நடவடிக்கையை அரபிக் கடலில் மேற்கொண்டது. பரந்த கடல் பரப்பில் நீடித்த வான் நடவடிக்கைகளை நமது கடற்படை உறுதி செய்தது. இந்தியாவின் நலன்களையொட்டி, எங்கள் உறுதிப்பாட்டை இந்தப் போர்த்திறன் நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பயிற்சி நடவடிக்கையானது, கடற்பகுதி பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், இந்தியப்பெருங்கடலிலும், அதைத் தாண்டியும் நமது வலிமையைக் காட்டுவதிலும் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைந்துள்ளது.

இந்தியாவின் உறுதிப்பாடு

இதன்மூலம் தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும், கடல் சார் தளத்தில் கூட்டுறவு கூட்டாண்மையை வளர்ப்பதிலும் இந்தியாவின் உறுதிப்பாடு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம்தாங்கி போர்க்கப்பலைக் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியக் கடற்படையில் சேர்த்த பிறகு இந்தியக் கடற்படை மேற்கொண்ட மிகப்பெரிய பயிற்சி நடவடிக்கை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story