சி.யூ.இ.டி நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்: யுஜிசி தலைவர் தகவல்


சி.யூ.இ.டி நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்: யுஜிசி தலைவர் தகவல்
x

இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான சி.யூ.இ.டி நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான சி.யூ.இ.டி. எனப்படும் மத்திய பல்கலைகழகங்களுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்தது.

இந்நிலையில், இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு(சி.யூ.இ.டி.) முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில்:-

இளங்கலைப் பட்டதாரிகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அல்லது அதற்கு சில நாட்கள் முன்னரே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இதனையடுத்து, சியூஇடி பொதுநுழைவுத் தேர்வில் பங்கேற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களும் நடப்பாண்டு இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறையைத் தொடங்க வசதியாக தங்கள் இணைய தளங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

முன்னதாக 6 கட்டங்களாக நடைபெற்ற சியூஇடி பொதுநுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. நாடு முழுவதும் சுமார் 60 சதவீத மாணவர்கள் இத்தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வின் கடைசி நாளான ஆகஸ்ட் 30ம் தேதி (மஸ்கட், ரியாத், துபாய் மற்றும் ஷார்ஜா) உட்பட 239 நகரங்களில் 444 தேர்வு மையங்களில் 1,40,559 தேர்வர்களுக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இணைய வேகம் குறைவு காரணமாக ஜார்க்கண்டில் பல இடங்களில் இத்தேர்வை நடத்த முடியவில்லை. அதில் பாதிக்கப்பட்ட 103 பேருக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார்.


Next Story