ரவுடிகளுடனான தொடர்பு, பா.ஜனதாவின் கலாசாரத்தை காட்டுகிறது


ரவுடிகளுடனான தொடர்பு, பா.ஜனதாவின் கலாசாரத்தை காட்டுகிறது
x
தினத்தந்தி 2 Dec 2022 2:48 AM IST (Updated: 2 Dec 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

ரவுடிகளுடனான தொடர்பு, பா.ஜனதாவின் கலாசாரத்தை காட்டுகிறது என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

கலபுரகி:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நல்ல வரவேற்பு

ராகுல் காந்தி வடகர்நாடகத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது, மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பல்லாரியில் பிரமாண்டமான அளவில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பா.ஜனதா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வட கர்நாடகத்திற்கு அரசியல் அமைப்பின் சிறப்பு அந்தஸ்து வழங்கி 10 ஆண்டுகள் ஆகிறது.

இதையொட்டி அரசியல் அமைப்பு சிறப்பு அந்தஸ்து கிடைக்க எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அந்த அந்தஸ்து கிடைத்த பிறகு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து வருகிற 10-ந் தேதி மக்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சியை கலபுரகியில் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்ய நான் இன்று (நேற்று) கலபுரகிக்கு வந்துள்ளேன். மக்களின் உணர்வுகளை முன்வைத்து பா.ஜனதா அரசியல் செய்கிறது. காங்கிரஸ் கட்சி மக்களின் வாழ்க்கை குறித்து சிந்தித்து செயல்படுகிறது.

பா.ஜனதாவின் கலாசாரம்

பா.ஜனதாவினர் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். எந்தெந்த ரவுடிகளுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பது தற்போது பகிரங்கமாகி வருகிறது. இது பா.ஜனதாவின் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது. எங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று பிற கட்சியினர் வந்தால் அவர்களை ஏற்று கொள்வோம். கட்சியில் புதியவர்களை சேர்க்க ஒரு குழு உள்ளது. அந்த குழுவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே புதியவர்களை கட்சியில் சேர்ப்போம்.

எங்கள் கட்சியில் தலைவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அரசியல் என்பது தேங்கிய நீர் அல்ல. அது ஓடிக்கொண்டே இருக்கும் நீர் போன்றது. அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல. பா.ஜனதாவில் தான் கருத்து வேறுபாடு உள்ளது. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். சித்தராமையா, தான் போட்டியிடும் தொகுதியை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று கூறியுள்ளார். இதுவே கட்சியின் கட்டுப்பாட்டை பிரதிபலிக்கிறது.

எல்லை பிரச்சினை

கட்சியில் தொண்டர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பா.ஜனதா ரவுடிகளை சேர்த்து கொள்கிறது. பெலகாவி எல்லை பிரச்சினையில் கர்நாடக பா.ஜனதா அரசு அரசியல் செய்வதை விட வேண்டும். அங்கு மக்கள் நிம்மதியாக வாழ வகை செய்ய வேண்டும். tஇவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story