கர்நாடகத்தில் மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனுக்களை யாரும் வாபஸ் பெறாததால் போட்டி உறுதி


கர்நாடகத்தில் மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனுக்களை யாரும் வாபஸ் பெறாததால் போட்டி உறுதி
x

கர்நாடகத்தில் வேட்புமனுக்களை யாரும் வாபஸ் பெறாததால் மாநிலங்களவை தேர்தலில் போட்டி உறுதியாகியுள்ளது. தேர்தல் களத்தில் 6 பேர் உள்ளனர்.

பெங்களூரு:

6 பேரின் மனுக்கள்

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 57 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. கர்நாடகத்தில் இருந்து 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்டது. பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் குபேந்திரரெட்டி ஆகிய 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த 6 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.

கர்நாடக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் ஆளும் பா.ஜனதா 2 இடங்கள் மற்றும் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 4-வது இடத்திற்கு பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதனால் 4-வது இடம் யாருக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

போட்டி உறுதி

இந்த நிலையில் மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். காங்கிரஸ் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்று தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அக்கட்சி தலைவர்களுக்கு ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் நிராகரித்துவிட்டனர்.

கடைசி நாளில் வேட்புமனுக்களை யாரும் வாபஸ் பெறவில்லை. இதையடுத்து தேர்தல் போட்டியில் 4 இடங்களுக்கு 6 பேர் உள்ளனர். இதன் மூலம் மாநிலங்களவை தேர்தலில் போட்டி உறுதியாகியுள்ளது. மனுக்களை வாபஸ் பெறும் அவகாசம் முடிவடைந்தாலும், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றி ஜனதா தளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க அவகாசம் உள்ளது. இதுகுறித்து அடுத்தடுத்து வரும் நாட்களில் தான் தெரியவரும்.

மல்லிகார்ஜுன கார்கே

தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் மல்லிகார்ஜுன கார்கே மூலம் சோனியா காந்தியின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறார்கள். கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பை மீறி சோனியா காந்தி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.

ஒருவேளை காங்கிரஸ் தனது முடிவில் உறுதியாக இருந்தால் பா.ஜனதா கட்சியின் 3-வது வேட்பாளர் லெகர்சிங் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.

மீண்டும் 'ரெசார்ட்' அரசியல்

கர்நாடகத்தில் 4-வது இடத்திற்கு போட்டி ஏற்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு ரெசார்ட் ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெசார்ட் அரசியல் தொடங்குகிறது. ரெசார்ட் அரசியலுக்கு கர்நாடகம் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story