மந்திரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது புகார்


மந்திரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது புகார்
x

பெங்களூருவில் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம் அடைந்த விவகாரத்தில் 2 மந்திரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு:

இன்ஸ்பெக்டர் மரணம்

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் நந்தீஷ். இவர், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, கடந்த மாதம் (அக்டோபர்) பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு, இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நந்தீஷ் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுத்து போலீஸ் பணியில் சேர்ந்திருப்பதாக மந்திரி எம்.டி.பி.நாகராஜ் கூறி இருந்தார்.

இன்ஸ்பெக்டர் நந்தீசை திட்டமிட்டு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஏற்கனவே நந்தீஷ் தற்கொலை குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மரணம் குறித்து கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் ஆபிரகாம் 6 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

மந்திரிகள் மீது புகார்

அதாவது நந்தீஷ் சாவுக்கு மந்திரிகள் அரக ஞானேந்திரா, பைரதி பசவராஜ், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ரீனா உள்பட 6 பேர் மீது ஆபிரகாம் புகார் அளித்துள்ளார். மேலும் மந்திரி பைரதி பசவராஜின் உறவினர் கொடுத்த நெருக்கடி மற்றும் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பணி இடைநீக்கம் செய்ததால் நந்தீசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் பணி இடமாற்றம், பதவிக்காக மந்திரி பைரதி பசவராஜிக்கு ரூ.50 லட்சமும், மந்திரி அரக ஞானேந்திராவுக்கு ரூ.20 லட்சமும் லஞ்சம் கைமாறி உள்ளதாகவும் அந்த புகாரில் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. சமூக ஆர்வலர் கொடுத்துள்ள இந்த புகார் இன்ஸ்பெக்டர் மரணத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story