தமிழ்நாடு போக்குவரத்து துறையில் மோசடி புகார் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இனி தள்ளிவைக்க கோரக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்


தமிழ்நாடு போக்குவரத்து துறையில் மோசடி புகார் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இனி தள்ளிவைக்க கோரக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்
x
தினத்தந்தி 22 March 2023 11:15 PM GMT (Updated: 22 March 2023 11:16 PM GMT)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இனி தள்ளிவைக்க கோரக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி புகார், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான சம்மன் ரத்து செய்யப்பட்டது.

அதை எதிர்த்து அமலாக்கத் துறை, மூல மனுதாரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நேற்று விசாரித்தது.

விசாரணை தொடங்கியவுடன், எதிர் மனுதாரர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சண்முகம் ஆகியோரது சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கபில் சிபல், சி.ஏ.சுந்தரம் ஆகியோர், இந்த விவகாரத்தில் பதில்மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரினர். அதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூல மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் நாச்சியப்பன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

தள்ளி வைக்க கோரக் கூடாது

வழக்கின் முக்கிய அம்சங்களை கேட்டு பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அதற்குள் அனைத்து பதில் மனுக்களையும் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், இனி விசாரணையை தள்ளி வைக்க கோரக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியது.


Next Story