கர்நாடக சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்தும் காங்கிரஸ்


கர்நாடக சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்தும் காங்கிரஸ்
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பில் முந்தும் காங்கிரஸ்.

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெறுகிறது. 13-ந்தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஏ.பி.பி. சி ஓட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அதாவது சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 111 முதல் 127 இடங்களையும், பா.ஜ.க. 68 முதல் 80 இடங்களையும், ஜனதா தளம் (எஸ்) 23 முதல் 35 இடங்களையும் பிடிக்கும். சுயேச்சை 0-2 இடங்களை பிடிக்கும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐதராபாத்-கர்நாடகா பகுதியில் காங்கிரசுக்கு 19 முதல் 23 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 8 முதல் 12 இடங்களும், ஜனதா தளம் (எஸ்) மற்றும் சுயேச்சை தலா 1 இடங்களை பிடிக்கும்.

மும்பை-கர்நாடகா பகுதியில் 50 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு தலா 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், காங்கிரஸ் கட்சி 25 முதல் 29 இடங்கள் வரையும், பா.ஜ.க. 21 முதல் 25 இடங்கள் வரையும் பிடிக்கும் என கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.

கடலோர மாவட்டங்களில் 21 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பா.ஜ.க.வுக்கு 46 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 41 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 6 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மத்திய கர்நாடகாவில் பா.ஜ.க. 38 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 41 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கர்நாடகாவில் மொத்தம் உள்ள 35 இடங்களில் பா.ஜ.க. 12 முதல் 16 இடங்கள் பெறும். காங்கிரசுக்கு 18 முதல் 22 இடங்கள் பிடிக்கும். ஜனதாதளம் (எஸ்) 2 இடங்களை பிடிக்கும் என கூறப்படுகிறது.

அடுத்த முதல்-மந்திரி யார் என்பது தொடர்பான கேள்விக்கு பெரும்பாலானோர் சித்தராமையாவுக்கு விருப்பம் தெரிவித்தனர். அவருக்கு ஆதரவாக 39.1 சதவீதம் பேரும், பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், எச்.டி.குமாரசாமிக்கு 21.4 சதவீதம் பேரும், டி.கே.சிவக்குமாருக்கு 3.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Next Story