வேட்பு மனு நிறைவு நாளில் 5 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு


வேட்பு மனு நிறைவு நாளில் 5 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் நிறைவு நாளில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. அதில் சி.வி.ராமன்நகர் தொகுதியில் தமிழரான ஆனந்த்குமாருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

முன்னாள் மேயர் சம்பத்ராஜ்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளுக்கு 6-வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை நேற்று காலை வெளியிட்டது. இதில் சி.வி.ராமன்நகர் தொகுதியில் தமிழரான ஆனந்த்குமாருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

அந்த தொகுதியில் தமிழரான முன்னாள் மேயர் சம்பத்ராஜிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டின் மீது நடந்த தாக்குதல் மற்றும் வன்முறையில் அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால், அவருக்கும் டிக்கெட் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழருக்கு வாய்ப்பு

அவர் பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலராகவும், பல்வேறு நிலைக்குழுக்களின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அந்த தொகுதியில் தமிழர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. அந்த தமிழர்கள் மனதில் வைத்து காங்கிரஸ் கட்சி தமிழர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் 6-வது வேட்பாளர் பட்டியல்படி ராய்ச்சூர் தொகுதி முகமது சலாமுக்கும், சிட்லகட்டாவில் பி.வி.ராஜீவ்கவுடாவுக்கும், சி.வி.ராமன்நகரில் எஸ்.ஆனந்த்குமாருக்கும், அரக்கல்கோடுவில் எச்.பி.ஸ்ரீதர்கவுடாவுக்கும், மங்களூரு வடக்கு தொகுதியில் இனியத் அலிக்கும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் அவசரம் அவசரமாக தங்களின் வேட்புமனுவை தயார் செய்து, தங்களுக்குரிய தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.


Next Story