நெருக்கடிநிலை காலத்தில் என்னை போல் ஆயிரம் பேரை காங்கிரஸ் சிறைக்கு அனுப்பி ஜனநாயகத்திற்கு முடிவு கட்டியது: ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்
நெருக்கடிநிலை காலத்தில் என்னை போல் ஆயிரம் பேரை காங்கிரஸ் சிறைக்கு அனுப்பி ஜனநாயகத்திற்கு முடிவு கட்டியது என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் பேசினார். அப்படி அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படுவதற்கான எந்த விசயங்களையும் செய்யவில்லை. ஆனால், அவை இந்தியாவிடம் இருந்து வர்த்தகமும், பணமும் பெற்று கொள்கிறது என ராகுல் காந்தி பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் அவர் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயக ரீதியில் போட்டியிடும் இயல்பு முற்றிலும் மாறி விட்டது. அதற்கான காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரேயொரு அமைப்புதான். அடிப்படைவாத, பாசிச கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து இந்திய அமைப்புகளையும் தனது பிடிக்குள் வைத்து உள்ளது என கூறினார்.
இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 1975-ம் ஆண்டு நெருக்கடிநிலை காலத்தில் நான் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன்.
என்னை போன்ற ஆயிரம் பேரை காங்கிரஸ் கட்சி சிறைக்கு அனுப்பி ஜனநாயகத்திற்கு முடிவு கட்டியது. ஒட்டுமொத்த இந்தியாவையும் சிறைச்சாலையாக மாற்றியது. அவருக்கு ஜனநாயகம் பற்றி பேசும் உரிமை உண்டா? என்று கேட்டுள்ளார்.
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்றால், நிறைய மக்கள் இங்கே இருக்க முடியுமா? நாட்டில் ஜனநாயகம் உள்ளது. அதனாலேயே அவர்கள் தேர்தல்களில் வெற்றி பெறுகின்றனர். நாடாளுமன்றம் நடைபெறுகிறது. நாம் தொடர்ந்து நமது வேலையை செய்து வருகிறோம். அவர் (ராகுல் காந்தி), அவரது அரசியல் செயல்திட்டத்தின்படி செயல்படுகிறார் என்று கூறினார்.
தொடர்ந்து அவர், சங்கம் பற்றி அவரது முன்னோர்கள் நிறைய கூறி விட்டனர். ஆனால், சங்கம் பற்றியும் மற்றும் அதன் பணி பற்றியும் தெரியும் நாட்டுக்கு தெரியும் என கூறியுள்ளார். ராகுல் காந்தி அதிக பொறுப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் அறிவுரையாக கூறியுள்ளார்.