கோலரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ்
கோலார் மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் கோலார் தங்கவயல், பங்காருபேட்டை, முல்பாகல் ஆகிய 3 தொகுதிகளும் தனித்தொகுதிகள் ஆகும். கோலார், மாலூர், சீனிவாசப்பூர் ஆகிய 3 தொகுதிகளும் பொது தொகுதிகள் ஆகும். கோலார் பாராளுமன்ற தொகுதியும் தனித்தொகுதி தான்.
காங்கிரஸ் கோட்டை
கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) ஒரு தொகுதியிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றி உள்ளனர்.
கோலார் மாவட்டம் தொடக்கத்தில் இருந்தே காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகிறது. அதனால் வரும் தேர்தலில் கோலார் மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வியூகம் வகுத்து வருகிறார்கள்.
சீனிவாசப்பூர்
சீனிவாசப்பூர் தொகுதியை எடுத்துக் கொண்டால் தற்போது அங்கு ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ரமேஷ் குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முன்னாள் சபாநாயகரான இவருக்கே காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.
இவருக்கு கடும் போட்டியாக இருப்பவர் ஜனத தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த வெங்கடசிவா ரெட்டி. அக்கட்சி சார்பில் அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்கள் இருவருக்குமே நேரடி போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. மந்திரி ரமேஷ் குமாருக்கே அதிக வெற்றிவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜனதா சார்பில் குஞ்ஜூரு சீனிவாச ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோலார்
நடப்பு சட்டசபை தேர்தலில் அதிக கவனம் ஈர்க்கும் தொகுதியாக கோலார் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். ஆனால் கட்சி மேலிடம் உத்தரவின்பேரில் வருணாவில் போட்டியிடுகிறார். ஆனாலும், கோலாரில் போட்டியிடுவதில் சித்தராமையா பிடிவாதமாக உள்ளார். இதனால் கோலார் தொகுதிக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. அங்கு ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சீனிவாசகவுடா. அவர் காங்கிரசில் சேர்ந்துவிட்டார். ஆனால் அவரும் சித்தராமையாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கூறி வந்தார். இந்த நிலையில் அந்த தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத்துக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.
ஜனதாதளம்(எஸ்) கட்சி ஸ்ரீநாத் என்பவரை களமிறங்கி உள்ளது. பா.ஜனதா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வர்த்தூர் பிரகாசை வேட்பாளராக அறிவித்துள்ளது.
மாலூர்-முல்பாகல்
மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நஞ்சேகவுடா. அவருக்கே காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. பா.ஜனதா சார்பில் மஞ்சுநாத் கவுடாவும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் ராமேகவுடாவும் களமிறங்குகிறார்கள். இத்தொகுதியில் 3 கட்சிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.
முல்பாகல் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எச்.நாகேஷ். சுயேச்சை வேட்பாளரான இவர், தற்போது பா.ஜனதாவில் இணைந்துவிட்டார். ஆனால், அவருக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கவில்லை. அக்கட்சி சார்பில் சீகேஹள்ளி சுந்தர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த சம்ருதி மஞ்சுநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் சாம்பய்யா மற்றும் அஞ்சும் ஆகிய 2 பேரும் டிக்கெட் கேட்டு வருகிறார்கள்.
பங்காருபேட்டை
பங்காருபேட்டை தொகுதி கடந்த 2008-ம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டதாகும். அதற்கு முன்பு இத்தொகுதி பேத்தமங்களா தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டின்போது பேத்தமங்களா பகுதி மற்றும் 184 கிராமங்கள், கோலார் தங்கவயல் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதனால் பங்காருபேட்டை தொகுதி உருவாக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி ெவற்றி பெற்றார். இந்த முறையும் அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் எம்.நாராயணசாமி போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி மல்லேஸ் பாபு களமிறங்குகிறார்.
கோலார் தங்கவயல்
கோலார் தங்கவயல் சட்டமன்ற தனித்தொகுதி ஆகும். இத்தொகுதியில் இதுவரையில் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய குடியரசு கட்சி, அ.தி.மு.க. ஆகியவையே வெற்றிபெற்றுள்ளன. இங்கிருந்து தமிழர்களின் குரல்தான் சட்டசபையில் ஒலித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. சம்பங்கியின் தாய் ராமக்காவுக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கியது. ராமக்காதான் கோலார் தங்கவயலில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.எல்.ஏ. ஆவார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எச்.முனியப்பாவின் மகள் ரூபாகலா சசிதர் வெற்றி பெற்றார். இந்த முறையும் அவருக்கே காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி ரமேஷ் பாபுவை களமிறக்கி உள்ளது.பா.ஜனதா சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த அஸ்வினி சம்பங்கியே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் வெற்றி-தோல்வி நிலவரம்
தொகுதி வெற்றி தோல்வி
கோலார் சீனிவாசகவுடா(ஜ.தளம்-எஸ்) 82,788 செய்யது ஜமீர்பாஷா(காங்.) 38,537
மாலூர் நஞ்சேகவுடா(காங்.) 75,677 மஞ்சுநாத்கவுடா(ஜ.தளம்-எஸ்) 57,762
பங்காருபேட்டை நாராயணசாமி(காங்.) 49,556 வெங்கடமுனியப்பா(பா.ஜ.க.) 42,051
சீனிவாசப்பூர் ரமேஷ்குமார்(காங்.) 93,571 வெங்கடசிவரெட்டி(ஜ.தளம்-எஸ்) 83,019
முல்பாகல் எச்.நாகேஷ்(சுயே.) 74,213 சம்ருதி மஞ்சுநாத்(ஜ.தளம்-எஸ்) 67,498
கே.ஜி.எப். ரூபாகலா சசிதர்(காங்.) 71,151 அஸ்வினி சம்பங்கி(பா.ஜ.க.) 30,324