காங்கிரஸ், ஜாமீனில் இருக்கும் கட்சி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் தாக்கு
காங்கிரஸ் ஜாமீனில் இருக்கும் கட்சி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
ஜாமீனில் உள்ளது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விதான சவுதா வளாகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே போல் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கும் அவர் மாலை அணிவித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ராகுல் காந்தியின் பாதயாத்திரை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. காந்தி ஜெயந்தி நாளான இன்று(நேற்று) போலி காந்திகள் குறித்து பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் ஜாமீனில் வெளியே உள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். காங்கிரஸ் ஒரு ஜாமீனில் இருக்கும் கட்சி. முன்பு கர்நாடகம், காங்கிரஸ் மேலிடத்திற்கு ஏ.டி.எம். போல் இருந்தது.
விசாரணை நடத்த தயார்
தற்போது அந்த நிலை இல்லையே என்ற குறைபாடு அவர்களுக்கு இருக்கக்கூடும். கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் பெறப்படுவது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்த குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் வழங்கினால் அதுகுறித்து விசாரணை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். சன்னபட்டணாவில் நடந்த நிகழ்வை கவனித்தேன்.
அரசு திட்ட தொடக்க விழாக்களில் அரசியல் கலக்காமல் உரிய முறையை பின்பற்ற வேண்டும். நாம் ஜனநாயகத்தை பின்பற்றுகிறோம். அதே போல் நடந்துகொள்ள வேண்டும். இங்கு வன்முறைக்கு இடம் கிடையாது. சுய கவுரவத்தை விட திட்டங்களின் பயன் மக்களுக்கு போய் சேர வேண்டும். அங்கு நடந்த வன்முறை குறித்த விவரங்களை கேட்டு பெற்றுள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.