லடாக் பகுதிக்கு சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!
2 நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜம்மு,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைபயணத்தை தொடருவார் என்றும், அந்த பயணத்தை குஜராத்தின் போர்பந்தரிலிருந்து தொடங்கி அருணாசல பிரதேசத்தின் லோகித் மாவட்டத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒரு பகுதியாக, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்குச் சென்றார். இதனை தொடர்ந்து, பிப்ரவரியிலும் அவர் மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டார். ஆனால் லடாக் செல்ல முடியவில்லை. இந்நிலையில், 2 நாள் பயணமாக இன்று லடாக் பகுதிக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பெல்ஜியம், நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பா சுற்றுப்பயணத்தையும் அவர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.