காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால் தெருவில் இறங்கி போராடுகின்றனா் - ஸ்மிருதி இரானி பரபரப்பு குற்றச்சாட்டு


காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால் தெருவில் இறங்கி போராடுகின்றனா் -  ஸ்மிருதி இரானி பரபரப்பு குற்றச்சாட்டு
x

Image Courtesy: ANI

தினத்தந்தி 13 Jun 2022 12:59 PM IST (Updated: 13 Jun 2022 1:10 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியினா் நடத்தும் போராட்டம் காந்தி குடும்பத்தின் சொத்துகளை பாதுகாக்கும் முயற்சி என மத்திய மந்திாி ஸ்மிருதி இரானி விமா்சித்து உள்ளாா்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், திக்விஜய சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார். இதனையடுத்து தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவுடன் ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்குச் சென்றார். ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மற்றும் அசாமின் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இதுகுறித்து கருத்து தொிவித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி , காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால், அமலாக்கத்துறைக்கு அழுத்தம் கொடுக்க தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது காந்தி குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகும் என அவா் தொிவித்தாா். மேலும் இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் காந்தி குடும்பத்தினர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் ஆர்வம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

1 More update

Next Story