லிங்காயத் சமூகத்தை காங்கிரஸ் தலைவர்கள் அவமதிக்கிறார்கள்


லிங்காயத் சமூகத்தை காங்கிரஸ் தலைவர்கள் அவமதிக்கிறார்கள்
x

லிங்காயத் சமூகத்தை காங்கிரஸ் தலைவர்கள் அவமதிக்கிறார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

தியாகம் செய்ய முடியாது

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெலகாவி மாவட்டம் சவதத்தியில் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கரை இன்டல்கா சிறையில் 2 முறை காங்கிரஸ் சிறையில் தள்ளியது. இப்போதும் அவரை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தி வருகிறது. ராகுல் காந்தி வீரசாவர்க்கரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். அவர் 10 முறை பிறந்தாலும், வீரசாவர்க்கரின் தியாகத்தை போல் அவரால் தியாகம் செய்ய முடியாது.

மகதாயி பிரச்சினை

அவரது தியாகத்தை கவுரவிக்கும் வகையில் இங்குள்ள சுவர்ண சவுதாவில் அவரது படம் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. மராட்டியம், கோவாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, மகதாயி பிரச்சினைக்கு தீா்வு காணவில்லை. கடந்த 2007-ம் ஆண்டு கோவாவில் பேசும்போது, மகதாயி நீரை கர்நாடகத்திற்கு வழங்க முடியாது என்று சோனியா காந்தி கூறினார்.

தற்போது பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு மகதாயி நீரை வழங்கும் பணியை செய்துள்ளார். இந்த முறை பெலகாவி மாவட்டத்தில் உள்ள 18 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும். இதற்கு மக்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தல் வரும்போது மட்டுமே மராத்தி மக்கள் குறித்து காங்கிரசுக்கு நினைவு வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் மராத்தி சமூக மேம்பாட்டு வாரியம் அமைத்துள்ளது.

ராமர் கோவில்

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு அதை லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு வழங்கியுள்ளோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சிக்கு வராது. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் எந்த சமூகத்தின்

இட ஒதுக்கீட்டை ரத்து செய்வீர்கள் என்பதை காங்கிரசார் கூற வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் அடுத்த ஆண்டு திறக்கப்படும். பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் சொல்கிறது. ஆஞ்சநேயர் பிறந்த தினம் குறித்து காங்கிரஸ் கட்சி ஆவணங்கள் கேட்கிறது.

இதன் மூலம் ஆஞ்சநேயருக்கு அக்கட்சி அவமானம் இழைத்துள்ளது. பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்தது நாங்கள். ஆனால் அமைப்பின் ஏஜெண்டு போல் காங்கிரஸ் செயல்படுகிறது. பசவண்ணரின் கொள்கை அடிப்படையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி அவமரியாதை செய்கிறது. லிங்காயத் சமூகத்தை காங்கிரஸ் தலைவர்கள் அவமதிக்கிறார்கள். ஆனால் அந்த சமூகத்தை கவுரவிக்கும் பணியை பா.ஜனதா செய்கிறது. எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை நாங்கள் முதல்-மந்திரி ஆக்கியுள்ளோம்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.


Next Story