மராட்டிய காங்கிரஸ் எம்.பி. திடீர் மரணம்


மராட்டிய காங்கிரஸ் எம்.பி. திடீர் மரணம்
x

கோப்புப்படம்

சிறுநீரக கல்லடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மராட்டியத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பாலு தனோர்கர் திடீரென மரணம் அடைந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர் சுரேஷ் என்ற பாலு தனோர்கர் (வயது 47). காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நாக்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நாக்பூர் ஆஸ்பத்திரியில் அவருக்கு கல்லடைப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையை தொடர்ந்து திடீரென அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக அவர் 'ஏர் ஆம்புலன்ஸ்' விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

திடீர் மரணம்

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று அதிகாலை திடீரென சிகிச்சை பலனின்றி பாலு தனோர்கர் எம்.பி.யின் உயிர் பிரிந்தது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று இருந்த ஒரே எம்.பி. பாலு தனோர்கர் தான். மரணம் அடைந்த பாலு தனோர்கர் எம்.பி.க்கு பிரதிபா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மனைவி பிரதிபா மராட்டிய சட்டசபை உறுப்பினராக உள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

பாலு தனோர்கர் எம்.பி.யின் மரணத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story