காங்கிரஸ்-என்.சி.பி. கட்சிகளே உண்மையான எதிரிகள்; பா.ஜ.க. அல்ல... சிவசேனா அதிரடி


காங்கிரஸ்-என்.சி.பி. கட்சிகளே உண்மையான எதிரிகள்; பா.ஜ.க. அல்ல... சிவசேனா அதிரடி
x

சிவசேனாவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-என்.சி.பி. கட்சிகளே உண்மையான எதிரிகள் என்றும் பா.ஜ.க. அல்ல என்றும் விகாஸ் கோகாவாலே கூறியுள்ளது சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

புனே,

மராட்டியத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து உள்ளது. அதற்கு மகா விகாஸ் அகாடி என்றும் பெயரிட்டு உள்ளனர்.

சிவசேனாவில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பரத்சேத் கோகாவாலே. இவரது மகன் விகாஸ் கோகாவாலே. அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 4 பேர் மற்றும் சிவசேனா நிர்வாகி ஒருவர் ஆகியோர் கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

இதனை சுட்டி காட்டி பேசியுள்ள விகாஸ் கோகாவாலே, நம்முடைய கூட்டணியை காப்பாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால், அவர்கள் அதனை அழிக்க பாடுபட்டு வருகிறார்கள் என காட்டமுடன் கூறியுள்ளார்.

சிவசேனாவின் உண்மையான எதிரிகள் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி. கட்சிகளே. பா.ஜ.க. அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். சிவசேனாவின் உழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பணிகளின் பலன்களை சரத் பவார் தலைமையிலான கட்சி பெற்று வருகிறது.

கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சிவசேனாவின் தலைவர்களை அபகரிப்பதில் என்.சி.பி. ஈடுபடுகிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதனால் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story