பா.ஜ.க.வுக்கு எதிராக மாநில கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவோம்- ராகுல் காந்தி


பா.ஜ.க.வுக்கு எதிராக மாநில கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவோம்- ராகுல் காந்தி
x

நாங்கள் பெரிய அண்ணன் அல்ல, பா.ஜ.க.வுக்கு எதிராக மாநில கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவோம் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் கருத்து

காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்து.

அப்போது கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பற்றித்தான் பா.ஜ.க. பேசுகிறது. அது மாநிலக்கட்சிகள் பற்றி பேசுவது இல்லை. ஏனென்றால், மாநிலக்கட்சிகளுக்கு என்று அவர்களுக்கான இடம் இருக்கிறது, ஆனாலும் அவற்றால் பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவற்றிடம் சித்தாந்தம் இல்லை. இந்த சித்தாந்த போர் எளிதானது அல்ல. இந்த போர் சித்தாந்த போராக அமைந்துள்ளதால் மாநிலக்கட்சிகள் இதில் போரிட முடியாது. காங்கிரஸ் கட்சி மட்டுமே இந்த சித்தாந்த போரில் போரிட முடியும்" என குறிப்பிட்டார்.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த கருத்தை எதிர்க்கட்சிகள் பலவும் சாடின.

நிலையை மாற்றினார்

இப்போது மாநிலக்கட்சிகள் மீதான நிலைப்பாட்டில் ராகுல் காந்தி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.

அவர் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில், 'இந்தியாவுக்கான யோசனைகள்' என்ற மாநாட்டின் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இதையொட்டி கூறியதாவது:-

உதய்பூர் மாநாட்டில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. நாங்கள் நடத்துவது ஒரு சித்தாந்த போர் ஆகும். இது தேசிய அளவிலான சித்தாந்த போர். இதன் அர்த்தம், தமிழ்நாட்டின் அரசியல் அமைப்பு என்ற வகையில் நாங்கள் தி.மு.க.வை மதிக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலான சித்தாந்தத்தை கொண்டுள்ளது.

சித்தாந்த போர் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய பார்வைக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயானது ஆகும்.

காங்கிரஸ் மேலானது அல்ல...

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் அது பிற எதிர்க்கட்சிகளை விட எந்த விதத்திலும் மேலானது அல்ல. நாங்கள் எல்லோருமே ஒரே போரில் தான் ஈடுபடுகிறோம். அவரவர், அவரவருக்கான இடத்தை பெற்றிருக்கிறார்கள். நாங்கள் எங்களுக்கான இடத்தைக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் கட்சி, மாநில கட்சிகளை மதிக்கிறது. பா.ஜ.க.வுக்கு எதிரான போர் என்பது குழு முயற்சிதான்.

நாங்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக தேசிய அளவில் ஒரு இயக்கம் நடத்துவதில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள எங்கள் நண்பர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். பெரிய அளவில் மக்களை சென்றடைவோம். காங்கிரஸ் கட்சியை பெரிய அண்ணனாக நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் குழுவாக முயற்சிப்போம்.

இந்தியாவை மீட்டெடுக்க...

நாங்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக சும்மா போராட வில்லை. இது வெறும் அரசியல் போராட்டம் இல்லை. இது இந்தியாவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் ஆகும். பா.ஜ.க. குரல்களை தடுக்கிறது. நாங்கள் குரல்களுக்கு செவி சாய்க்கிறோம். இங்கு 2 விதமான வடிவமைப்புகள் இருக்கின்றன. ஒரு வடிவமைப்பு, குரல்களை தடுப்பதற்கானது. மற்றொன்று, மக்களுக்கு செவிசாய்ப்பதாகும்..

நான் செவி சாய்க்க விரும்புகிறேன் என்ற அணுகுமுறையை பிரதமர் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நமது பிரதமர் அதை விரும்புவதில்லை.

மாநில கட்சிகளின் ஆதரவை நாடுவோம்...

ஊடகங்கள் மீது பா.ஜ.க. 100 சதவீத கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, நிறுவன கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது பரந்த கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறது. அவர்கள் பெற்றிருக்கிற நிதிகளைப் பொறுத்தவரையில் நாங்கள் பொருந்திப்போகிற நிலை இல்லை. நாங்கள் தகவல் தொடர்பு, நிதி விஷயத்தில் முற்றிலும் புதிய வழிகளை சிந்திக்க வேண்டும். எங்களுடன் மக்கள் பெருந்திரளாக இருக்கிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிராந்திய விஷயங்கள் போன்றவற்றில் வெகுஜன இயக்கங்களை நடத்துவது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். இதில் காங்கிரஸ், மாநில கட்சிகளின் ஆதரவை நாடும்.

இந்தியாவின் ஆன்மா

இந்தியாவின் ஆன்மா பா.ஜ.க,.வின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. குரலற்ற ஆன்மா ஒன்றுமே இல்லை. நடந்திருப்பது என்னவென்றால் இந்தியாவின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. அது சித்தாந்தத்தாலும், தொழில்நுட்பத்தாலும் நசுக்கப்பட்டுள்ளது. ஒட்டுண்ணித்தனமாக மாறிவருகிற நம் நாட்டின் நிறுவன கட்டமைப்பால் அது நசுக்கப்பட்டுள்ளது.

எனவேதான் மோசமான நிலை. பாகிஸ்தானில் இருப்பதைப்போன்று சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தற்போது நாட்டை மென்று தின்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஷ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மகுவா மொய்த்ரா உள்ளிடடோரும் கலந்துகொண்டனர்.


Next Story