60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பிரிவினை அரசியலை செய்தது; பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பிரிவினை அரசியலை செய்து வந்ததாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
உப்பள்ளி:
அரசியல் கலாசாரம்
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அன்று இரவு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தங்கிய அவர் நேற்று கட்சி நிா்வாகிகள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ஜே.பி.நட்டா பேசியதாவது:-
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நிற்கவில்லை. நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் பிரிவினை அரசியலை தான் செய்தது. சமுதாயத்தை இரண்டாக உடைத்த அக்கட்சி இன்று பலவீனம் அடைந்துள்ளது. பா.ஜனதா மண்டல ரீதியிலான அடையாளங்களை கவுரவிக்கிறது. பிரதமர் மோடியின் துடிப்பான தலைமையின் கீழ் நாடு வலுவாக உள்ளது. இந்திய அரசியல் கலாசாரத்தை மோடி மாற்றியுள்ளார். மத்திய பணிக்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி நாட்டின் 13 மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி விமர்சனம்
மோடி பிரதமரான பிறகு பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. அண்டை நாடுகளில் அவசர நேரங்களில் தேவையான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. முன்பு இந்தியா, பாகிஸ்தான் பெயர்கள் குறித்து விவாதம் நடந்தது. தற்போது இந்தியாவின் பெயர் பேசப்படும்போது, பாகிஸ்தான் பெயர் வருவது இல்லை. இதை எல்லாம் மோடி மாற்றி அமைத்துள்ளார்.
ஜி20 நாடுகளின் சபைக்கு அனைவரையும் இந்தியா வரவேற்கிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது, அங்கிருந்த 23 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்தோம். இதற்கு பிரதமர் மோடி காரணம்.
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
இட ஒதுக்கீடு
அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேசுகையில், 'பா.ஜனதா கட்சி வலுவாக வளர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜே.பி.நட்டா, கட்சியை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். சில மாநிலங்களில் பா.ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். அதனால் நீங்கள் கட்சிக்கு பலம் கொடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்கள் உள்பட பிற சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். நாங்கள் இட ஒதுக்கீடு என்ற தேன்கூட்டில் கை வைத்தோம். ஆனால் எங்களை தேனீக்கள் கடிக்கவில்லை' என்றார்.