எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்: மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு
ஜூலை 17, 18ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது, பொது செயல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றன.
பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக இந்த கூட்டம் கர்நாடகாவில் பெங்களூர் நகரில் ஜூலை 17,18-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூறிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,
ஒத்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் பெங்களூர் கூட்டத்துக்கு அழைத்துள்ளோம். ஜூலை 17-ந் தேதி மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும். பின்னர் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து 18-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார்.
முன்னதாக, மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில்,
ஜூன் 23ம் தேதி பாட்னாவில் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டோம். வரும் லோக்சபா தேர்தலில் ஒற்றுமையாகப் போராடுவது குறித்து ஆலோசித்தோம். அப்போது மீண்டும் சந்திப்பதற்கு, 2வது கூட்டத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜூலை 17,18ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும். உங்களை பெங்களூரில் சந்திக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2வது எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பெங்களூருவில் நடத்தாமல், வேறு இடங்களில் நடத்த வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் பெங்களூருவில் நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.