சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: விதானசவுதா வளாகத்தில் காங்கிரசார் போராட்டம்


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்:  விதானசவுதா வளாகத்தில் காங்கிரசார் போராட்டம்
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக பெங்களூரு விதானசவுதாவில் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். முறைகேட்டில் தொடர்புடைய பா.ஜனதாவினர் பெயர்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக பெங்களூரு விதானசவுதாவில் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். முறைகேட்டில் தொடர்புடைய பா.ஜனதாவினர் பெயர்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

காங்கிரசார் போராட்டம்

கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி. போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மந்திரி அஸ்வத் நாராயண் மற்றும் சில மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய பா.ஜனதாவினர் மற்றும் மந்திரிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களது பெயர்களை பகிரங்கப்படுத்த வலியுறுத்தியும் பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா, ஹரிபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பா.ஜனதாவினர் மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் டி.கே.சிவக்குமாா் நிருபர்களிடம் கூறியதாவது:-

பகிரங்கப்படுத்த வேண்டும்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டுக்கு பின்னணியில் முதல்-மந்திரி மற்றும் போலீஸ் மந்திரி அலுவலக அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. சிலரை பிடித்து விசாரணை நடத்திவிட்டு, போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மற்றொரு மந்திரி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய நபரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக மந்திரியின் சகோதரர் கூறி இருக்கிறார். முறைகேடு தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியை கைது செய்திருப்பதாக பா.ஜனதா தலைவா்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் முறைகேட்டில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் பெயர் பகிரங்கப்படுத்தவில்லை. அவர்களது பெயர்களை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மந்திரிகள், பா.ஜனதாவினர் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story